எங்க ஊரு கவுன்சிலர்.

மார்ச் 20, 2009

ஒருவன்:

  1. காலை முதல் மாலை வரை பேருந்து நிறுத்தத்திற்கு பக்கத்திலுள்ள குட்டி சுவற்றின் மீது அமர்ந்து கொண்டிருப்பது.
  2. ஊரில் நடக்கும் எல்லா பிரச்சனைகளிலும் முன்னிற்பது (பல சமயங்களில் பிரச்சனைகளுக்கே காரணமாகவும் இருப்பது)
  3. மாலை வேளைகளில் உல்லாசமாக (வார்த்தை உபயம்: தினத்தந்தி) இருப்பது. 
  4. எந்த வேலைக்கும் செல்லாமலேயே காலம் கழிக்கும் கலையை பயில்வது.
  5. முடிந்தவரை மற்றவரை சீண்டுவது.
  6. அப்பாவிகளை கிண்டல் செய்வது.
  7. எல்லோரிடமும் கடன் வாங்கி தர மறுப்பது.
  8. அடடா… இதையெல்லாம் ஒரே வார்த்தையில் விளக்கி விடலாமே… அவன் ஒரு பொறுக்கி!!

மற்றொருவன்:

  1. நன்றாக படிப்பது.
  2. சுயமரியாதையுள்ள பணிக்கு செல்வது.
  3. பெரியோரிடம் பணிவாக இருப்பது.
  4. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது.
  5. மற்றவரை துன்புறுத்தாமல் இருப்பது.
  6. அடடா… இதையெல்லாம் ஒரே வார்த்தையில் விளக்கி விடலாமே… அவன் பாவம்… நல்லவன்!!!

ஒருவன் இன்று ஏரியா கவுன்சிலர் மற்றொருவன் அவன் காரில் போவதை ஏக்கத்தோடு பார்ப்பவன்.


பொய் சொல்லப் போறேன்…

மார்ச் 19, 2009

நியாயங்களும் நீதிகளும் இப்போது வெகுவாக மாறி விட்டன.  முன்பெல்லாம் பொய் பேசக்கூடாது என்று குழந்தைகளுக்கு சொல்லப் பட்டது. பொய் சொன்னால் அதற்கு தண்டனையும் கொடுக்கப்பட்டது.

இன்று பொய் சொல்லாமல் வாழ இயலுமா? இல்லை பொய் சொல்லாதே என குழந்தைகளுக்கு அறிவுறுத்தத்தான் இயலுமா?

பொய் மட்டுமல்ல மற்ற எல்லா நீதிகளையும் கேள்விக்குள்ளாக்க வேண்டிய தேவை இன்றைக்கு இருக்கத்தான் செய்கிறது.

வேறு எந்த நீதியை கேள்விக்குள்ளாக்கலாம் என்று பின்னூட்டமிடுங்களேன்!!!


கல்வி தரத்தை உயர்த்த யோசனை?

மார்ச் 9, 2009

தேர்தல்மூலம் மக்களின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படும் (MLA, MP, Ward Councilor, etc.) எல்லோருடைய குழந்தைகளும், பேரக் குழுந்தைகளும், கொள்ளுப் பேர குழந்தைகளும் (உண்மைதான் அவ்வளவு வயதிலும் பிரதிநிதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்) கண்டிப்பாக அரசாங்கம் நடத்தும் கல்வி நிறுவனங்களில் தான் கற்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும்.

அந்த சட்டத்தில் எந்த exception களும், விதிமுறை தளர்தலும், ஓட்டைகளும் இருக்ககூடாது.

இந்த சட்டத்தை மீறும் எவர் பற்றியும் ஆதாரத்தோடு தேர்தல் கமிசனுக்கு ஒரு கடிதம் போட்டால் உடனடியாக அவர்களின் பதவி பறிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு வரும் புகார்கள் 1 மாதத்திற்குள் முடிவெடுக்கப்பட வேண்டும்.

இந்த கோரிக்கையை எந்த கட்சி ஏற்றுக் கொள்கிறதோ அந்த கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும்.

இந்த கோரிக்கையை முதல் கட்டமாக எல்லா வாக்காளர்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும்.

எப்படி இருக்கு என் யோசனை? பின்னூட்டத்தில் தெரிவியுங்களேன்!!!


ஓய்வு பெறும் வயது 33?

ஜூலை 30, 2007

உங்களுக்கு தெரியுமா? தனியார் துறையில் ஓய்வு பெறும் வயதை நடைமுறையில் 33 ஆக குறைத்து விட்டார்கள். இப்போது வரும் ஆட்கள் தேவை விளம்பரங்களைப் பார்த்தால் தலைப்பின் பொருள் சரியாகவே விளங்கிவிடும்.

பணியில் இருக்கும்போது நியாமான விடுமுறை, மருத்துவ வசதிகள், ஓய்வறை, பெண்களுக்கான அரசாங்கம் தரும் வசதிகள் என எதுவே சரியாக வழங்கப்படுவதில்லை. ஓய்வுகால ஊதியம், பி.எம். மற்றும் எந்த உதவித் தொகைகளும் முறையாக வழங்கப்படுவதில்லை. தொழிலாளர் நலத்திட்டங்கள் யாவும் ‘லேபர்’ எனப்படும் கடைநிலை ஊழியர்களுக்கு மட்டும்தான் நடைமுறையில் உள்ளது. ‘ஒயிட்காலர்’ பணி செய்பவர்கள் தான் இன்றைக்கு உண்மையான கொத்தடிமைகள். படிக்காதவர்களுக்கு இருக்கும் தன்மானத்தில் ஒரு பகுதியாவது இவர்களுக்கு இருக்குமானால் நிலைமை இப்படி இருந்திருக்காது.

33ஐ தாண்டி விட்டாலே தனியார் துறை ஊழியர் அடிமாடாகி விடுகிறார். இந்த வயதையும் தாண்டி பணிபுரிய வேண்டுமென்றால் சுயமரியாதை கிலோ என்ன விலையென்று கேட்க வேண்டும்.

இப்போது நிறைய ஓய்வு (33வயதுக்கு பிறகு என படிக்கவும்) பெற்றவர்கள் தங்களின் மீதி பொழுதைப் போக்க சேவை தான் செய்து வருகிறார்கள். அதாவது மீண்டும் வேறு பணியில் சேர வேண்டுமானால் அவர்களுக்கு கிடைக்கும் ஊதியம் உயிரோடு இருப்பதற்கும், பேருந்தில் பணியிடத்துக்கு வந்து போவதற்கும் சரியாக இருக்கும்!!

கணிணித்துறை வளர்ச்சி மட்டுமே வளர்ச்சியில்லை. அரசின் கடமை இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமான இடைவெளியை குறைப்பது. ஆனால் சில இந்தியர்கள் (டாடாக்கள், பிர்லாக்கள், அம்பானிகள், நாராயணமூர்த்தி, …) எல்லா தொழிலையும் செய்து அதனால் இந்திய பொருளாதாரம் உயர்ந்தால் பயனில்லை. சுப்பனுக்கும் குப்பனுக்கும் வருமானம் உயர வேண்டும். அதுவே உண்மையான வளர்ச்சி.


டீவிக்கு செய்யும் போன்?

ஜூலை 24, 2007

ஏனுங்க சாமி டீவிக்கு செய்யற வெட்டி தொலைபேசிக்கு அதிக கட்டணம் செய்யும் பொன்னாள் என்னாளோ?

வாழ்த்து சொல்லலாம் வாங்க, அல்லோ அல்லோ, நீங்கள் கேட்ட பாடல், இத்தியாதி இத்தியாதி. பாமரன் அவர்களின் கருத்துகளை படித்தால் ஏற்பட்ட தெளிவுதானுங்க இதெல்லாம்


யார் கழுதை?

ஜூலை 22, 2007

DonkeyDonkeyDonkey

நேற்று குழந்தையை அவள் பாட்டி வீட்டில் விட்டுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தேன். சிக்னலில் எதிர்புறம் நின்று கொண்டிருந்தது அந்த பாவப்பட்ட கழுதை.

அதன் இரு முன்புற கால்கள் கட்டப்பட்டு எப்படியோ சாலையின் நடுவில் வந்து நின்று கொண்டிருந்தது. எல்லா வாகனங்களும் அதன் மேல் இடித்துவிடாமல் மிகவும் கவனமாக சென்று கொண்டிருந்தன.

யாராவது இடித்து கொன்றால் உடனே தன் துன்பங்களிலிருந்து விடுதலை என்று சொல்வது போலிருந்தது அதன் கண்களைப் பார்த்த போது.

ஏன் யாருமே கழுதையை ஒரு உயிராக மதிப்பதில்லை? என் குழந்தை இதுவரை கழுதையை நேரில் பார்த்ததே இல்லை. இனிமேலும் பார்க்கவே முடியாதோ?


ரஜினிக்கு ஏனுங்க இத்தன மவுசு?

ஜூலை 1, 2007

ஒண்ணுமே புரியல! எதுக்கு இத்தன பேர் ரஜினியை இப்படி ரசிக்கிறாங்க? அட குழந்தைகளுமா? இதுக்கு பின்னாடி உள்ள சமூக, அரசியல் மற்ற இன்ன பிற காரணங்கள் என்னவாக இருக்கும்?


யாருங்க இந்த பிரதீபா பாட்டீல்?

ஜூன் 29, 2007

ஜனாதிபதி தேர்தலில் போட்டி போடற இன்னோரு வேட்பாளர் ஷெகாவத்தோட பேர பலமுறை கேட்டிருக்கேன். ஆனா இந்தம்மா யாரு, இத்தன நாள் எங்கிருந்தாங்க, மக்களுக்கு என்ன பண்ணியிருக்காங்க, அட இனிமே தான் என்ன பண்ண போறாங்கன்னு யாராச்சும் சொன்ன கேட்டுக்குவேன்.